புதுமண தம்பதிகள் நெரிசலின்றி அம்மனை தரிசிக்க: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஏற்பாடு…!
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கியமானதாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு திருச்சி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர். புதுமண தம்பதிகள் சமயபுரம் வந்து அம்மனை வணங்கி வழிபாடு செய்தால், ஐஸ்வர்யம் பெருகும், குடும்பம் விருத்தி அடையும் என்று நம்பப்படுகிறது. இதனால், புதுமண தம்பதிகள் இங்கு வந்து அம்மனை வணங்கி வருகின்றனர். அவ்வாறு வரும் புதுமண தம்பதிகள் தெற்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் இவ்வழியாக வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். இந்நிலையில், திருமணமான நாளில் அம்மனை தரிசிக்க வருகைதரும் புதுமண தம்பதிகளை கோவிலின் வடக்கு வாசல் வழியாக அனுமதிக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,70 வயதுக்கு மேலான சீனியர் சிட்டிசன்கள், கைக்குழந்தையுடன் வருகை தரும் பெண்கள் ஆகியோரும் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். முகூர்த்த நாட்களில் வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வரும் பக்தர்களை டார்கெட் செய்து, அம்மனை நெரிசலின்றி தரிசிக்க ஏற்பாடு செய்கிறோம் எனக்கூறி ரூ.500 முதல் ரூ.5000 வரை சிலர் மோசடி செய்கின்றனர்.இந்நிலையில் சமயபுரம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வடக்கு வாசல் தரிசனம்” பக்தர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.