இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில்… குதிப்போம் காட்டேஜ் உரிமையாளர்கள் அறிவிப்பு…
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
16சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு…
எத்தனை வாகனங்கள் வருகின்றன. எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர முடியும். இதனை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சுற்றுலா வாகனங்களை சோதித்தபிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கிறார்கள். இ-பாஸ் நடை முறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக. வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர் மகேந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
ஊட்டியில் காட்டேஜ் மற்றும் லாட்ஜில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது அதனை ரத்து செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான
லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள். ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் உள்பட அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.