திருச்சி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: கலெக்டரிடம் மனு…
திருச்சி அருகே ஊரில் இருந்து ஒதுக்கிய குடும்பங்களை சேர்க்க வேண்டுமானால் ரூ 2லட்சம் கொடுக்க வேண்டும் – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ல் அங்குள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது தங்கராஜ் என்பவர் தனது செலவில் மூலவர் காளியம்மனுக்கு கற்சிலையை செய்தார். அந்த சிலையை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி ராஜலிங்கம் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் அந்த கற்சிலையை எடுத்து வீதியில் வீசி எறிந்தனர். இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் அந்தச் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து ராஜலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன், மாரியப்பன், மணி உட்பட 4குடும்பத்தை சேர்ந்த எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக கிராமத்தில் நடைபெறும் எந்த நிகழ்விலும் நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், மனித உரிமைகளை கூட அங்கு பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜலிங்கம் கிராமத்தில் சேர வேண்டுமானால் ரூபாய் 2லட்சம் பணம் தனக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார். இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. பூசாரி ராஜேந்திரன் தன்னிச்சையாக ஊர் முக்கியஸ்தர்களை மிரட்டி இந்த திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் விசாரணை கடந்த 4ம்தேதி நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு வந்த வட்டாட்சியர் செல்வம் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பினரையும் அழைத்தார். அழைப்பின் பேரில் அங்கு சென்றபோது ராஜலிங்கம் தரப்பில் நாங்கள் கோயிலில் பொங்கல் வைக்கவும், சாமி கும்பிட அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதைக் கேட்ட வட்டாட்சியர் ஊர் நிகழ்ச்சிக்கு பின்னர் தனியாக சென்று பொங்கல் வைத்து கும்பிட வேண்டும் என்று ஒரு தலைபட்சமாக முடிவுகளை தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள எங்கள் குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.