தொழில் முனைவோருக்கான ஓராண்டு பட்டய படிப்பு ஜூலை 1 முதல் துவங்குகிறது…கூடுதல் தலைமைச் செயலர் தகவல்…
திருச்சியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஓராண்டு பட்டய படிப்பில் சேருவதற்கான விளக்கக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த விளக்க கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொழில் முனைவோருக்கான ஓராண்டு பட்டைய படிப்பு குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் மாணவர்களிடையே பேசுகையில்…
அரசு ஒரு ஆண்டுக்கு அங்கீகரித்துள்ள மாணவர் சேர்க்கை அளவு 500 ஆகும். இந்தப் பட்டய படிப்புக்கு ஏதேனும் ஒரு இளங்கலை கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (A pass in any undergraduate degree). வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்விக் கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள தொகை ரூபாய் 80,000 கூடுதல் செலவினங்களுக்காக இடிஐ நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூபாய் 20000 மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் ஆகும். இதே கல்வியை இதர இடங்களில் பயில வேண்டுமானால் அதற்கு ஆகும் செலவு இந்த தொகை விட குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக ஆகும். இந்த ஓராண்டு தொழில் முனைவோரை உருவாக்கும் பட்டய பயிற்சி வேலைவாய்ப்பு பெறுவதற்கு அல்ல. இதில் பயிற்சி பெறுகிறவர்கள் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சியே ஆகும்.
இந்த நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் உண்மையிலேயே தொழில் முனைவராக ஆக விரும்புகிறார்களா அல்லது வேலை வாய்ப்புக்காக இதில் வருகிறார்களா என்பது குறித்து அறியப்படுவதற்காக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் இடிஐஐ தமிழ்நாடு நிறுவனத்தின் இணையதளம் வழியாக (www.editn.in) நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.பட்டயப் படிப்பு துவங்கும் நாள் ஜூலை1 முதல் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர் மகாலட்சுமி, குறு, சிறு தொழில் சங்க பிரமுகர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.