திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது பறவைகள் பூங்கா!… பொதுமக்கள் மகிழ்ச்சி…
திருச்சி மாவட்டத்தில் பறவைகள் பூங்கா பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பது தொடர்பாக இதில் காணலாம்.
திருச்சி மாநகராட்சி சார்பில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் திருச்சியில் 13 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பறவைகள் பூங்கா அமைக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவானது 6 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் 13.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த பூங்காவில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது. செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளர்க்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை போன்ற இடங்கள் அனைத்தும் இந்த பூங்காவில் செயற்கையாக அமைக்கப்பட இருக்கின்றன. மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி, மற்றும் பாலைவனம் போன்றவை தத்ரூபமாக இந்த பூங்காவில் அமைக்கப்பட இருக்கின்றன.
மேலும் கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த தியேட்டரில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் சார்ந்த மற்றும் பறவைகள் சார்ந்த படங்கள் திரையிடப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அறிவியல் குறும்படங்களும் திரையிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இந்த பூங்காவில் கேண்டீன், பார்க்கிங் வசதிகள் அதாவது 60 கார்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பூங்காவானது குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை அருகில் கம்பரசம்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்க இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அதிகாரிகளுடன் சென்று இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவை ஆய்வு செய்தார். இந்நிலையில் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதுமட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால் மதிய நேரங்களில் தொழிலாளிகள் யாரையும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்கலாம் என்று கூறி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த பறவைகள் பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த பணிகள் அனைத்தும் எப்போது முடிந்து இந்த பூங்கா திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.