அமைச்சர் தொகுதியின் அவல நிலை: அலட்சியத்தின் உச்சத்தில் அதிகாரிகள்…
திருச்சி 62 வது வார்டு பகுதி மக்களின் அவல நிலை – மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்:
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் அருகிலுள்ள காலி மனைகளில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது மேலும் அருகில் உள்ள வீடுகளை சுற்றியும், சாலைகளில் வழிந்தோடுகிறது. தேங்கிய கழிவுநீரீல் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர் இது குறித்த தகவல் அறிந்து வந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் இந்த கழிவு நீர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
இந்த ரங்கா காவேரி அப்பார்ட்மெண்ட் கட்டிய காலத்திலிருந்து தற்போது வரை முறையான செப்டிக் டேங்க் அமைக்கப்படவில்லை. மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியை சேர்ந்த 62-வது வார்டு திமுக பெண் கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை என தெரிவிக்கிறார். இந்த அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு அருகில் உள்ள வீடுகளை சுற்றி குளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது குறிப்பாக கேணி மற்றும் போர்களிலும் இந்த கழிவு நீர் கலந்து அதை பயன்படுத்த முடியாத சீர்கேடு ஏற்பட்டுள்ளது இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டை சுற்றி குறைந்தது 3000மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இந்த கழிவு நீரில் இருந்து பரவும் நோய் தொற்றால் பல உயிர்கள் போகும் முன் தக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் . குறிப்பாக இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கே என் நேருவின் தொகுதியில் மக்களின் அவல நிலை இதுதான் என வருத்தத்துடன் தெரிவித்தார்.