அதிக வருவாய் ஈட்டியதில்… தஞ்சை ரயில் நிலையம் இரண்டாம் இடம்…
திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டியதில் இரண்டாம் இடம் பிடித்து தஞ்சாவூர் ரயில் நிலையம் சாதனை படைத்துள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் அனைத்து கோட்டங்களிலும் பெருமளவில் வருமானம் வருகிறது. இதில் அதிக வருவாயை ஈட்டி தருவதில் திருச்சிக்கு அடுத்தப்படியாக தஞ்சாவூர் ரயில் நிலையம் உள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டில் திருச்சி கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததில் தஞ்சாவூர் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் 79 லட்சத்து 24 ஆயிரம் பயணிகள் வந்து சென்றனர். இதன் மூலம் ரூ.165 கோடியே 68 லட்சத்து 89 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
அதற்கு அடுத்து தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு 42 லட்சத்து 52 ஆயிரம் பயணிகள் வந்து சென்றதில் ரூ.51 கோடியே 63 லட்சத்து 1000 வருவாய் கிடைத்துள்ளது.