News

குன்னூர் அருகே சாலையில் சுற்றிதிரியும் யானையை கண்காணிக்க: 15 பேர் கொண்ட குழு…

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றைக் கொம்பு யானையைக் கண்காணிக்க 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.

இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாள்களாக மேட்டுப்பாளையம்- குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.

இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்புப் பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக குன்னூா் வனச் சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *