திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்: வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி…
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தும் விவகாரம்
ஹோட்டலை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது,உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுறுத்தல்,வழக்கை விரிவான விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவு.
திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு தெரிவித்தனர்.தொடர்ந்து ஹோட்டலை காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும்,ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து ஹோட்டலை காலி செய்ய இன்று மாலை 3 மணி வரை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக எஸ்.ஆர்.எம் நிறுவனம் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. திடீரென விடுதியை காலி செய்ய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. போதிய கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே சுற்றுலா வளர்ச்சிக்கழக நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி,விடுதி நிர்வாகத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாம். என அறிவுறுத்தி, விரிவான விசாரணைக்காக செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.