மணிகண்டம் அருகே டூவிலர் மீது ஜீப் மோதி விபத்து: ஒருவர் பலி ஒருவர் படுகாயம்… வட்டாட்சியரின் போதை ஓட்டுனர் கைது…
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் எதிரே திருச்சி மாவட்ட வரவேற்பு வட்டாட்சியரின்அரசு வாகனம், திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையின் மீது ஏறி, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி தனபால் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோவில் பூசாரி மணி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த மணிகண்டன் போலீசார் அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதைத் தொடர்ந்து உயிரிழப்புக்கு காரணமான வட்டாட்சியர் வாகன ஓட்டுநர் புஷ்பராஜ் மது போதையில் இருந்ததாக கூறி, அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.