குடியிருப்புக்குள் புகுந்த கருஞ் சிறுத்தையால்…கோத்தகிரி மக்கள் பீதி…
கோத்தகிரியில் குடியிருப்புக்குள் புகுந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் புகுந்து நாய், பூனை ஆகியவற்றை வேட்டையாடிச் செல்கின்றன.
இந்நிலையில் கோத்தகிரி, வெஸ்ட் புரூக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாயிற் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்த கருஞ் சிறுத்தை சிறிது நேரம் உலாவியபின் உணவு எதுவும் கிடைக்காததால் பின்னா் அங்கிருந்து சென்றது.
இந்தக் காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு சிறுத்தையைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.