News

ஊட்டியில் துவங்கியது பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு:ஆளுநர் ரவி பங்கேற்பு…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30ம் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29ம் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30ம் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *