திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.
பல மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவித் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாயிரம் ரூபாய் எனவும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் 5000 எனவும் வழங்கிட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான பிரத்தியேக குறை தீர்ப்பு கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கச்செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் படி 2024-25 ஆம் ஆண்டிற்கான 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை சுழற்சி முறை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
திருச்சிராப்பள்ளி கோர்ட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை சென்றுவர பேட்டரி கார் இயக்கிட வேண்டும்.
திருச்சி கோர்ட்டு வளாகத்தை கடந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை செல்லும் பாதையில் உள்ள சாலையை காலதாமதமின்றி செப்பனிட வேண்டும்.
ஊராட்சிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிந்தோருக்கும் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கக்கூடிய வங்கிக் கடன்கள் அனைத்தையும் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்பனள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.