சிதலமடைந்த பெருமாள் கோவில்:மறுகட்டமைத்து குடமுழுக்கு செய்திட முதல்வருக்கு கோரிக்கை…
ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள சிதிலமடைந்த சீனிவாச பெருமாள் கோவிலை மறு கட்டமைப்பு திருப்பணியினை மேற்கொண்டு குடமுழுக்கு செய்திட முதல்வருக்கு
வேண்டுகோள்!
ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள சிதிலமடைந்த சீனிவாச பெருமாள் கோவிலை மறு கட்டமைப்பு திருப்பணியினை மேற்கொண்டு குடமுழுக்கு செய்திட வேண்டுமென அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பேசுகையில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் கே.சோழங்கநல்லூர் ஊரில் விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கால பூஜை திட்டத்தில் வைணவ சமய பிரிவைச் சார்ந்த அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவிலில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் அருள் பாலிக்கின்றார். கருவறைக்கு வெளியே சிவலிங்கமும் உள்ளது. மேற்படி திருக்கோவில் பராமரிப்பு இன்றி கற்கோவில் சிதிலமடைந்து உள்ளது. திருக்கோவிலினை சீரமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு மனு எண் 347165 /டி ஒய் / 11 நாள் 1-12-2011ஆம் தேதி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கோரிக்கை மனு அனுப்பினார்.
மனு அளித்து சீரமைப்பு பணி துவங்காததால் பல ஆண்டுகள் ஆன நிலையில் திருக்கோவில் மேலும் அபாயகரமான நிலையில் சிதிலமடைந்த நிலையில் மூலவர் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத கற்சிலை விக்ரகம் திருக்கோயிலின் வடகிழக்கு பகுதியில் கொட்டகையில் வைக்கப்பட்டு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலை 10 – 3 -2020 அன்று செயல் அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார். இத் திருக்கோவில் கருவறை, முகமண்டபம் உள்ள பகுதியில் அரசமரம் வளர்ந்து கற் சுவர்களில் விரிசல் விழுந்து உள்ளது. சுவர்களில் உள்ள கற்களும் விழுந்து உள்ளன. மகா மண்டபம், முன் மண்டபம் வடக்கு பக்கம் முற்றிலும் விழுந்து விட்டன. திறந்தவெளி மண்டபம் உள்ள வடகிழக்கு திசையில் பலத்த சேதமடைந்தும் சிதிலமடைந்தும் தூண் சரிந்து உத்தரம் ஒரு பகுதி விழுந்துள்ளது. இப்பகுதி மிக ஆபத்தான நிலையில் உள்ளது. தளங்கள் சிதிலமடைந்து உள்ளன. முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில் கற்சுவர், உத்தரம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.
சிதிலமடைந்த திருக்கோவில் தென்கிழக்கு திசையில்
கே.சோழங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கோவில் படியில் அமர்ந்தும் வந்தும் செல்கிறார்கள். அதுமட்டுமின்றி பொதுமக்கள் கோவில் பின்புறம் மலஜலம் கழித்து வருகிறார்கள்.
சிதிலமடைந்த திருக்கோவில் பலத்த சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் இருக்கையில் மனித உயிருக்கும் உடைமைக்கும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் கோவில் அருகே பள்ளி மாணவர்கள் செல்வதை தடுக்க பள்ளி கல்வித்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் செல்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ள திருக்கோவிலை முழுவதும் பிரித்து துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனையில் மறு கட்டமைப்பு பணியினை ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்து குடமுழுக்கு செய்ய வேண்டும். திருக் கோவிலில் உள்ள பழங்கால கற்களை வரிசைப்படுத்தி பழமை மாறாமல் கற்கள் கொண்டே சீரமைப்பு பணியினை உடனே மேற்கொள்ள வேண்டும்.
இக்கோவிலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்து சமய அறநிலையத் துறையினர் சிதிலமடைந்துள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருப்பணிக்கு தக்க சமயத்தில் போதிய நிதி ஒதுக்கி வல்லுனர்கள் கருத்துருவில் மறு கட்டமைப்பு பணியினை சீரும் சிறப்புமாக செய்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.