ஊட்டியில் துவங்கிய 126-வது மலர் கண்காட்சி…படங்கள்…
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
விழாவில் நீலகிரி கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது. வாயிலின் நுழைவு வாயில் பல வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு, ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பாரம்பரியமிக்க ஊட்டி மலைரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும், பல வண்ண மலர்கள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு காட்சியளிக்கிறது.
இதுதவிர பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் 10 நாட்களும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரோஜா பூங்காவில் பல ஆயிரம் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரக்கூடிய வகையில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வனவிலங்குகளை காக்க வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுஎருமை, சிங்கம் உள்பட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட மலைரெயில், அலங்கார வளைவுகளை கண்டு ரசித்தனர்.
இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அவர்கள் அதன் அருகில் சென்று அதனை தொட்டு பார்த்தும், அதன் முன்பாக நின்று புகைப்படமும் எடுத்தனர்.
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் கண்காட்சியை காண பூங்காவுக்கு திரண்டு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.